"மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான ஆட்சி அமைய பாஜக-அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள்'
By DIN | Published On : 01st April 2019 06:09 AM | Last Updated : 01st April 2019 06:09 AM | அ+அ அ- |

மத்தியிலும், மாநிலத்திலும் நிலையான, உறுதியான ஆட்சி அமைய பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
காரைக்குடி கழனிவாசல் பிள்ளையார் கூடத்தில் சனிக்கிழமை மாலை பிரசாரத்தைத் தொடங்கிய அவர் தொடர்ந்து கழனிவாசல் மூன்று சாலை சந்திப்பு, மூ.வி பள்ளி, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.
அதைத் தொடர்ந்து செக்காலை தண்ணீர்தொட்டிப் பகுதியில் அவர் பேசியது:புல்வாமா தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்ட உறுதியான பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களுக்கு பல திட்டங்களைத் தந்துள்ளார். இங்கு என்னை எதிர்த்துப் போட்டியிடுபவரின் தந்தை பல முறை வெற்றி பெற்று அமைச்சராக இருந்தும் இத்தொகுதி பின்தங்கியப் பகுதியாக உள்ளது. அப்படிப்பட்டவர்கள் மீண்டும் வாக்குகள் கேட்டு வருகின்றனர்.
மத்தியிலும் தமிழகத்திலும் நிலையான ஆட்சி, உறுதியான ஆட்சி நடைபெற இந்த மக்களவைத் தேர்தலில் தாமரைச் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார்.
பின்னர் புதிய பேருந்து நிலையம், ரயில்வே பகுதி, கண்டனூர் சாலை, சந்தை, சத்திய மூர்த்தி நகர், பாப்பா ஊருணி, பழைய பேருந்து நிலையம், வ.உ.சி சாலை, முத்துப்பட்டணம் ஆகிய பகுதிகளிலும் வாக்கு சேகரித்தார்.
அப்போது அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலாளர் பிஆர். செந்தில்நாதன் எம்.பி, நகரச் செயலாளர் சோ. மெய்யப்பன், தேமுதிக, பாமக, பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.