மானாமதுரை தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம்

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் ஓய்ந்ததையடுத்து

மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரம் ஓய்ந்ததையடுத்து, இத் தொகுதியில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் திருப்புவனத்தில் தங்களது பிரசாரத்தை நிறைவு செய்தனர். 
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் நாகராஜன், அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடி, திமுக சார்பில் இலக்கியதாசன், நாம்தமிழர் கட்சி சார்பில் சண்முகப்பிரியா மற்றும் சுயேச்சைகள் உள்பட 13 பேர் களத்தில் உள்ளனர். 
அமமுக வேட்பாளர் மாரியப்பன் கென்னடி செவ்வாய்க்கிழமை காலை மானாமதுரை நகரம் மற்றும் ஒன்றியத்திலுள்ள பல கிராமங்களுக்கு சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அதன்பின் திருப்புவனம் சென்ற இவர், கட்சித் தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வர திறந்த ஜீப்பில்  சென்று ஆதரவு திரட்டினார். இவர் தனது பிரசாரத்தை திருப்புவனத்தில் நிறைவு செய்தார். 
அதிமுக வேட்பாளர் நாகராஜன் மானாமதுரை ஒன்றியம் மற்றும் நகரில் சென்று வாக்கு சேகரித்த பின்னர் திருப்புவனம் சென்றார். அங்கு இவர் கூட்டணிக் கட்சியினருடன் ஊர்வலமாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மானாமதுரை நகரில் அதிமுக நகரச் செயலாளர் விஜி.போஸ், பாஜக நகரத் தலைவர் சங்கரசுப்ரமணியம் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தனர். திமுக வேட்பாளர் இலக்கியதாசன் இளையான்குடி நகர் பகுதியில் வாக்கு சேகரித்த பின்னர், திருப்புவனம் சென்று அங்கு கட்சியினருடன் திறந்த ஜீப்பில் ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார்.
அதிமுக, அமமுக, திமுக வேட்பாளர்கள் திருப்புவனத்தில் ஒரே நேரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தனர். இதனால், இவர்களது கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் நடத்திய ஊர்வலத்தால் திருப்புவனம் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com