காரைக்குடியில் வாக்குப் பதிவு இயந்திர அறைகளுக்கு 3 அடுக்குப் பாதுகாப்பு

சிவகங்கை மக்களவைத் தொகுதி, மானாமதுரை சட்டப்பேரவை (தனி) தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்

சிவகங்கை மக்களவைத் தொகுதி, மானாமதுரை சட்டப்பேரவை (தனி) தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், சிவகங்கை மாவட்ட ஆட்சியருமான ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்தார்.
காரைக்குடி வாக்குகள் எண்ணும் மையத்தில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. ஜெயச்சந்திரன் மற்றும்  வருவாய்த்துறை, தேர்தல் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆட்சியர் ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: 
சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டபேரவைத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மானாமதுரை சட்டப்பேரவை (தனி) தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
அதனை வேட்பாளர்களின் முகவர்கள் 24 நாள் மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்புப் பணிக்காக மத்திய காவல் படையிலிருந்து தனியாக 50 காவலர்களும், மாநில காவல்துறை காவலர்கள் 80 பேரும் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலமாக 400 காவலர்கள் நியமிக்கப்பட்டு வளாகம் முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள், டி.எஸ்.பி-க்கள், காவல் ஆய்வாளர்கள் ஆகியோரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 22 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்புப் பணி நடைபெற்று வருகிறது.
 மேலும் கூடுதலான கேமராக்களுக்கும் பொருத்தப்படவுள்ளன. இந்த மையத்தின் பாதுகாப்பு குறித்து உடனுக்குடன் தகவல்கள் எங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இவ்வளாகத்தில் தடையில்லா மின்சாரத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.
பின்னர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் கூறியது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள இந்தப்பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. வேட்பாளரின் முகவர்கள் 3 பேர் வரை இங்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு முறை ஒருவர் வீதம் மூன்று பேரும் மாறி, மாறி வரலாம். அவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. முகவரை மாற்றிக் கொள்ள விரும்பும் வேட்பாளர் தேர்தல் அலுவலரிடம் விண்ணப்பித்து வேறு நபரை நியமித்துக் கொள்ளலாம் என்றார்.
பேட்டியின் போது மாவட்ட வருவாய் அலுவலர் லதா, காரைக்குடி வட்டாட்சியர் பாலாஜி, காரைக்குடி டி.எஸ்.பி அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com