சிவகங்கையில் குழந்தையுடன் தந்தை ரயிலில் விழுந்து தற்கொலை முயற்சி
By DIN | Published On : 26th April 2019 02:04 AM | Last Updated : 26th April 2019 02:04 AM | அ+அ அ- |

சிவகங்கையில் வியாழக்கிழமை குடும்பத் தகராறில் 3 வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற தந்தையும், குழந்தையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச்சாமி (35). இவருக்கும் இவரது மனைவி உதயாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் உதயா தனது 3 குழந்தைகளுடன் சிவகங்கை எம்ஜிஆர் நகரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டாராம்.
இந்நிலையில் கார்த்திகைச்சாமி தன் மனைவியை அழைத்துச் செல்வதற்காக எம்.ஜி.ஆர் நகருக்கு வியாழக்கிழமை வந்தாராம். அங்கு இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகைச்சாமி தனது மகள் பவஸ்ரீ (3)-யை தூக்கிக் கொண்டு வீட்டின் அருகே உள்ள தண்டவாளத்துக்கு வந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இச்சம்பவம் நடைபெற்ற இடம் சிவகங்கை ரயில் நிலையம் அருகே என்பதால் ரயில் மெதுவாக வந்துள்ளது. இதில் ரயில் முன் விழுந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்தப் புகாரின் பேரில் மானாமதுரை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.