சிவகங்கையில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 26th April 2019 01:38 AM | Last Updated : 26th April 2019 01:38 AM | அ+அ அ- |

சிவகங்கை நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள 4 முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள், பள்ளி செல்லா குழந்தைகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் சிவகங்கை வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் கந்தவேல் (பொறுப்பு), பயிற்றுநர்கள் சதீஷ்குமார், ஜெயப்பிரகாசம், காளிராஜா, விஜயகிருஷ்ணன், ரூபாராணி, சித்திக் பாத்திமா ஆகியோர் சிவகங்கை நகர் மற்றும் மன்னர் மேல்நிலைப் பள்ளி பின்புறம் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் வியாழக்கிழமை கணக்கெடுக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.
அப்போது குழந்தைகளின் பெற்றோர்களிடம் அரசு பள்ளியின் தரம், கற்பிக்கப்படும் முறை குறித்தும், அரசின் சலுகைகள் குறித்தும் எடுத்துக் கூறினர்.
இதில் ஆசிரியப் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.