போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்ற வழக்கு: மேலும் ஒருவர் கைது
By DIN | Published On : 26th April 2019 02:05 AM | Last Updated : 26th April 2019 02:05 AM | அ+அ அ- |

இறந்தவர் பெயரில் இருந்த நிலத்தைப் போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மேலசெம்பொன்மாரி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு. இவரது தந்தை சுப்பன் கடந்த 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி இறந்தார். சுப்பன் பெயரில் கைகாட்டி எனும் ஊர் அருகே ஒன்றே முக்கால் ஏக்கர் நிலம் இருந்ததாம்.
அந்த நிலத்தை தேவகோட்டை புதுகுடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்(45) என்பவர் கடந்த 10-5-2018 ஆம் தேதி சுப்பன் விற்பனை செய்தது போல, தேவகோட்டை சார்-பதிவாளர் அலுவலகத்தில் கிரையப் பத்திரம் பதிவு செய்தாராம். பின்னர் அதே நிலத்தை கல்லலைச் சேர்ந்த கோவிந்தராஜன் என்பவருக்கு பவர் எழுதி கொடுத்துள்ளார். அவர் அந்த நிலத்தை காரைக்குடியைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு அண்மையில் விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த செல்லக்கண்ணு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயசந்திரனிடம் புகார் அளித்தார். இதன்பேரில் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் சிவக்குமார், கோவிந்தராஜன், மகேந்திரன், முரசொலி உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிந்து சிவக்குமார், முரசொலி ஆகிய இருவரையும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வந்தனர்.இந்த வழக்கு விசாரணையில் ஆறாவயலைச் சேர்ந்த ராமநாதன் (28) என்பவரும் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.