மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு
By DIN | Published On : 26th April 2019 02:06 AM | Last Updated : 26th April 2019 02:06 AM | அ+அ அ- |

மானாமதுரை ஸ்ரீ வீரழகர் கோயில் சித்திரைத் திருவிழா உற்சவ சாந்தி நிகழ்ச்சியுடன் வியாழக்கிழமை நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 15 ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் இரவு பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளிய வீரழகர், அதன்பின்னர் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடாகி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய வைபவங்களாக அழகர் எதிர்சேவை கடந்த 18 ஆம் தேதி இரவு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 19 ஆம் தேதி ஆற்றில் அழகர் இறங்கும் உற்சவமும், ஏப். 21 ஆம் தேதி அழகர் கருடசேவை வைபவமும் நடைபெற்றது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெற்ற இவ்விழாவில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வீரழகரை தரிசனம் செய்தனர். கடந்த புதன்கிழமை இரவு அப்பன்பெருமாள் கோயிலில் அழகருக்கு சந்தனக்காப்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அழகர் கோயிலைச் சென்றடைந்தார். கோயிலில் உற்சவசாந்தி நடத்தப்பட்டதையடுத்து இந்தாண்டு வீரழகர் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மண்டக்கப்படிதாரர்கள் செய்திருந்தனர்.