கீழப்பூங்குடியில் வடமாடு மஞ்சுவிரட்டு
By DIN | Published On : 04th August 2019 03:51 AM | Last Updated : 04th August 2019 03:51 AM | அ+அ அ- |

சிவகங்கை அருகே கீழப்பூங்குடியில் உள்ள பொங்கல் மடை அய்யனார் கோயில் மண்டாலபிஷேக விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு பொங்கல் மடை அய்யனார் சுவாமிக்கும், கிராம பரிவார தேவதைகளுக்கும் சனிக்கிழமை காலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வடமாடு மஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு பூஜைகள் நடைபெற்றன. கோயில் அருகே உள்ள திடலில் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து 12 காளைகள் பங்கேற்றன. 100-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளை பிடித்தனர். இதில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. கீழப்பூங்குடி, ஒக்கூர், மதகுபட்டி, நாலுகோட்டை, சோழபுரம், மலம்பட்டி, சிவகங்கை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வடமாடு மஞ்சுவிரட்டை பார்த்து ரசித்தனர்.