கோட்டையூர் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடுப்புகள் அமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 04th August 2019 03:51 AM | Last Updated : 04th August 2019 03:51 AM | அ+அ அ- |

காரைக்குடி கோட்டையூர் சாலையில் விபத்துகளை தடுக்க வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி புதிய பேருந்துநிலையத்திலிருந்து புறப்படும் பேருந்துகள் நூறடிச்சாலை, பெரியார் சிலை, செக்காலை முதல் வீதி, செக்காலை தண்ணீர் தொட்டி, பர்மா காலனி வழியாக கோட்டையூர் சென்று அங்கிருந்து புதுக்கோட்டை மார்க்கம், அறந்தாங்கி மார்க்கம் என செல்கின்றன. வெளியூரிலிருந்து அதாவது புதுக்கோட்டை, அறந்தாங்கி மார்க்க பேருந்துகள் கோட்டையூர் வந்து பர்மா காலனி, செக்காலை தண்ணீர் தொட்டி வழியாக வருமானவரி அலுவலகம், சுப்பிரமணியபுரம் முதல் வீதி (தெற்கு), நீதிமன்றம் வழியாக புதிய பேருந்துநிலையத்தை அடைகின்றன.
போக்குவரத்து மிகுந்த இச் சாலையின் இரு புறங்களிலும் கடைக்காரர்கள் பொருள்களை வைத்தும், பெயர் பலகை வைத்தும், மீன்வியாபாரம் செய்தும் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இச்சாலையில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவருகிறது. இச்சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக பர்மா காலனி அருகே உள்ள பெட்ரோல் நிலையம் எதிரே சாலையில் போலீஸாரால் வேகத் தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் வேகத் தடுப்புகளோ, வேகத்தடையோ அமைக்காததால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.
எனவே, இச் சாலையில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தி விபத்துகளை தடுக்க வேகத் தடுப்பு அல்லது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...