கீழச்சிவல்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி
By DIN | Published On : 12th February 2019 07:02 AM | Last Updated : 12th February 2019 07:02 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டியில் மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கீழச்சிவல்பட்டி தமிழ்மன்றம் சார்பில் ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஆண், பெண், சப்ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளாகவும் மற்றும் தனித்திறன் போட்டிகளாகவும் நடைபெற்றது.
இதில், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு தனியார் மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் ஜி.பெரியசாமி தலைமை வகித்தார். தமிழ்மன்ற செயலர் எஸ்.எம்.பழனியப்பன் முன்னிலை வகித்தார்.
இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விளையாட்டுத்துறை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.திருமலைச்சாமி பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளித் தாளாளர் பி.எல்.அழகுமணிகண்டன் வாழ்த்திப் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழச்சிவல்பட்டி பி. அழகாபுரி, விராமதி, தமிழ்மன்றத்தினர், புதுக்கோட்டை புத்தாஸ் வீரக்கலைகள் கழகம் நிறுவனர் சேதுகார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
முன்னதாக மெய்யப்பச்செட்டியார் பள்ளிச் செயலர் ஜி.குணாளன் வரவேற்றார். முடிவில் காரைக்குடி முகில் சிலம்ப பாசறை நிறுவனர் எஸ்.முத்துக்குமார் நன்றி கூறினார்.