சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக்கோயிலில் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கி திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணிகளின் போது சேதமடைந்திருந்த சோமநாதர் சுவாமி கல் மண்டபம் அகற்றப்பட்டு புதிதாக கருங்கல்லால் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை தெளிச்சாத்தநல்லூர் ஸ்தபதி ஏ.சண்முகம் வடிவமைத்தார்.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு கோயில் எதிரே பிரமாண்ட யாகசாலை மேடை
அமைக்கப்பட்டு 41 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சாந்தி பூஜைகள் நிறைவுபெற்று புனிதநீர் கடங்கள் வைத்து கடந்த 8 ஆம் தேதி முதல் யாகபூஜைகள் தொடங்கின. 120-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். திங்கள்கிழமை காலை ஆறாம்கால யாக பூஜை நிறைவடைந்து கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் காலை 9.30 மணிக்கு சோமநாதர் சுவாமி விமானம், ஆனந்தவல்லி அம்மன் விமானம், ராஜகோபுரம், சாலக்கோபுரம், பரிவார தெய்வங்களின் சன்னதி விமானங்களின் கலசங்களில் புனிதநீரை ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் நடத்தினர்.
பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் குழாய் மூலம் தெளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆனந்தவல்லி அம்மனுக்கும், சோமநாதர் சுவாமிக்கும் புனிதநீரால் அபிஷேகம் நடத்தி பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் மூலவர்களுக்கும் உற்சவர்களுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு மகா பஞ்சமுக பிரத்யங்கிரா கோயில் சார்பில் வைகையாற்றுக்குள் அன்னதானம் நடைபெற்றது. கோயில் நிர்வாகி ஞானசேகரன் சுவாமிகள் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆனந்தவல்லி சோமநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள் எஸ்.நடராஜன், ஏ.ஆர்.பி.முருகேசன், ஏ.ராமையா, எஸ்.நாகராஜன், உதயகுமார், சுந்தர்ராஜன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கணக்கான போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.