கல்லல் அருகே காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு: பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்
By DIN | Published On : 04th January 2019 01:37 AM | Last Updated : 04th January 2019 01:37 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வெங்கடராமாபுரம் கிராமத்தில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து பெருமளவில் குடிநீர் வீணாகி வருகிறது.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக தமிழக அரசு காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தின் மூலம் ரூ. 617 கோடிசெலவில் குடிநீரை விநியோகித்து வருகிறது. இத்திட்டத்தில், திருச்சி அருகே முத்தரசநல்லூர் ஆற்றுப்பகையில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி, கடலாடி, இளையான்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வெங்கடராமாபுரம் கிராமத்தின் வழியாகச் செல்லும் இக்குழாயில் வியாழக்கிழமை திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போதிய பராமரிப்பு இல்லாததால் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.