மாநில கிரிக்கெட், சதுரங்க அணிக்கு காரைக்குடி பள்ளி மாணவர்கள் தேர்வு
By DIN | Published On : 14th June 2019 08:01 AM | Last Updated : 14th June 2019 08:01 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள ஸ்ரீ ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் தமிழக கிரிக்கெட் மற்றும் சதுரங்க அணிகளில் பங்கேற்று விளையாட தேர்வு பெற்றுள்ளனர். இவர்களை பள்ளி நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள் வியாழக்கிழமை பாராட்டினர்.
இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் பி. ரித்திஸ் 14 வயதினருக்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவிலான கிரிக்கெட் அணியில் விளையாட தேர்வு பெற்றுள்ளார். இதே பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயிலும் மாணவர் சி.கண்ணன் சதுரங்க அணிக்கு மாநில அளவில் விளையாடுவதற்கு தேர்வாகியுள்ளார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளின் கோடைகால விடுமுறையில் கிரிக்கெட் விளையாட்டிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பயிற்சி வகுப்புகளில் மாணவர்
பி. ரித்திஸ் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தார்.
பின்னர் புதுக் கோட்டை, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருவாரூர் போன்ற பல மாவட்ட அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிவகங்கை மாவட்ட அணியில் பங்கேற்று விளையாடி தமிழ்நாடு மாநில அணிக்காக தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளி மாணவர் சி.கண்ணன் சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு சார்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சதுரங்கப்போட்டிகளில் கலந்துகொண்டு தேசிய அளவில் 17-ஆவது இடம் பெற்றுள்ளார். இவர்களை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர்.