காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நா. ராஜேந்திரனுக்கு, தமிழ்நாடு 9-ஆவது பட்டாலியன் தேசிய மாணவர் படைப் பிரிவு (என்.சி.சி.) சார்பில், கௌரவ கர்னல் பட்டம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
இதற்கான விழா, பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடைபெற்றது. இதில், தேசிய மாணவர் படையின் திருச்சி மண்டலத் தலைமை அதிகாரி கர்னல் ஆர். சிவநாதன், துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பட்டம் வழங்கினார்.
விழாவில், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு 9-ஆவது பட்டாலியன் என்.சி.சி. கமாண்டிங் அதிகாரி கர்னல் அஜய் ஜோஷி, கர்னல் ரத்னா ரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் செயல்படும் தேசிய மாணவர் படை அமைப்புகளை நெறிப் படுத்தும் விதமாக, இவ்விருது துணைவேந்தருக்கு வழங்கப்பட்டதாக என்.சி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் சிவநாதன் பேசியது: தேச கட்டமைப்புக்கு இளைஞர்களுடைய பங்கு முக்கியமாகும். மேலும், இளைஞர்களை தேசப் பற்றுள்ள மற்றும் பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதே தேசிய மாணவர் படைப் பிரிவின் முக்கிய நோக்கமாகும். தேசிய அளவில் இந்த ஆண்டுக்கு, அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் உள்பட 8 துணைவேந்தர்கள் மட்டுமே என்.சி.சி. கௌரவ கர்னல் பட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டனர் என்றார்.
விழாவில், துணைவேந்தர் நா. ராஜேந்திரன் ஏற்புரையாற்றினார்.
பின்னர், காரைக்குடி என்.சி.சி. 9-ஆவது படைப் பிரிவினரால் அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை துணைவேந்தர் ஏற்றுக்கொண்டார்.
இதில், துணைவேந்தரின் துணைவியார் சாந்தி ராஜேந்திரன், அழகப்பா கல்விக் குழும அறங்காவலர் தேவி அலமேலு வைரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், என்.சி.சி. அலுவலர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள், மாணவ, மாணவியர் என பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.