மானாமதுரையில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் பிரசாரம்
By DIN | Published On : 22nd March 2019 07:31 AM | Last Updated : 22nd March 2019 07:31 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடையே ஆதரவு திரட்டினர்.
மக்களவைத் தேர்தலுடன், மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. இங்கு, திமுக வேட்பாளராக இலக்கியதாசன், அதிமுக வேட்பாளராக நாகராஜன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்புவனத்துக்கு வந்த வேட்பாளர்கள் இருவருக்கும் அந்தந்த கட்சியினர் சால்வைகள் அணிவித்து வரவேற்பளித்தனர். அதைத் தொடர்ந்து, வேட்பாளர்கள் கட்சியினரிடம் ஆதரவு திரட்டினர். பின்னர், மானாமதுரை வைகையாற்று மேம்பாலம் அருகேயுள்ளஅண்ணா சிலை, காந்தி சிலை, தேவர் சிலைக்கு திமுக வேட்பாளர் இலக்கியதாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, இளையான்குடிக்குச் சென்று திமுக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இந் நிகழ்ச்சியில், திமுக மாவட்டச் செயலர் கே.ஆர். பெரியகருப்பன், இளையான்குடி, மானாமதுரை ஒன்றியச் செயலர்கள் சுப. மதியரசன், ராஜாமணி, அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் நாகராஜனுக்கு அக்கட்சியினர் மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் இரு சக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து, அதிமுக வேட்பாளர் அண்ணா, காந்தி, தேவர் ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பாஸ்கரன், ஒன்றியச் செயலர் எம். குணசேகரன், நகரச் செயலர் விஜி.போஸ், முன்னாள் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மாரிமுத்து, கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன், நகர கூட்டுறவு வங்கித் தலைவர் முனியசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
இதில், அமமுகவை சேர்ந்த பெண்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக் கட்சியிலிருந்து விலகி, மாவட்டச் செயலர் செந்தில்நாதன் முன்னிலையில் அதிமுகவில்
இணைந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...