சிவகங்கைக்கு மு.க.ஸ்டாலின் நாளை வருகை
By DIN | Published On : 28th March 2019 08:21 AM | Last Updated : 28th March 2019 08:21 AM | அ+அ அ- |

காங்கிரஸ், திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) சிவகங்கை வருகிறார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. செவ்வாய்க்கிழமை வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்றதை அடுத்து, தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத்தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் இலக்கியதாசன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரிக்கும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசல் முன் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்துக்கு திருப்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், திமுகவின் சிவகங்கை மாவட்ட செயலருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகிக்கிறார். இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். அதன்பின்னர், அங்கிருந்து மானாமதுரை சென்று பிரசாரம் செய்ய உள்ளார். அதன்பிறகு, ராமநாதபுரம் செல்கிறார்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...