மானாமதுரை தொகுதியில் 14 வேட்பு மனுக்கள் ஏற்பு-மநீம மனு நிராகரிப்பு
By DIN | Published On : 28th March 2019 08:23 AM | Last Updated : 28th March 2019 08:23 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த அதிமுக, திமுக, அமமுகவினர் உள்ளிட்ட 14 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அமமுக வேட்பாளர் சுயேச்சை வேட்பாளராக கருதப்படுவார் என தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.
மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் எஸ்.நாகராஜன், திமுக சார்பில் கரு.இலக்கியதாசன், அமமுக சார்பில் எஸ்.மாரியப்பன் கென்னடி, நாம் தமிழர் கட்சி சார்பில் சண்முகப்பிரியா, மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்குரைஞர் எம்.ராமகிருஷ்ணன் மற்றும் சுயேச்சைகள் 18 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதில் அதிமுக, திமுக, அமமுக, மநீம, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சிகளின் நிர்வாகிகள் சேங்கைமாறன், ராஜாமணி, அண்ணாதுரை, ஊ.சரவணன், குரு.முருகானந்தம், வழக்குரைஞர்கள் அக்கினிராஜ், கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரி திருவாசகம், வட்டாட்சியர் யாஸ்மின், டி.எஸ்.பி கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து அதிமுக, திமுக, அமமுக, நாம்தமிழர் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை உள்பட 14 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்படுவதாகவும் அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கு மாற்றாக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் தேர்தல் அலுவலர் திருவாசகம் தெரிவித்தார்.
மேலும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எம்.ராமகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவில் வேட்பாளரை முன் மொழிபவர்களின் கையெழுத்து இல்லாததால் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார். மேலும் அமமுக வேட்பாளராக போட்டியிடும் மாரியப்பன் கென்னடி சுயேச்சை வேட்பாளராகவே கருதப்படுவார் எனவும் தெரிவித்தார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...