மானாமதுரை பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்கியது
By DIN | Published On : 28th March 2019 08:20 AM | Last Updated : 28th March 2019 08:20 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை எல்லை பிடாரி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மானாமதுரையில் ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா தொடங்குவதற்கு முன்னதாக எல்லை பிடாரி அம்மனுக்கு திருவிழா நடத்தப்படும். அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா தொடங்கியதை முன்னிட்டு கோயிலில் அம்மன் சன்னதி எதிர்புறம் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்று பிடாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 9 நாள்கள் திருவிழா நடைபெறும். விழா நாள்களில் தினமும் மூலவர் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெறும். ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் உள்ள உற்சவர் பிடாரி அம்மன், கோயிலிலிருந்து தினமும் இரவு புறப்பாடாகி பிடாரி கோயிலுக்கு வந்து பூஜைகள் முடித்து அதன்பின் ஆனந்தவல்லி அம்மன் கோயிலுக்கு திரும்புவது வழக்கம். திருவிழாவின் முக்கிய வைபவமாக மாவிளக்குப்பூஜை மற்றும் சப்பரத் தேரோட்டம் ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் ஏராளமான பெண்கள் பிடாரி அம்மன் கோயிலுக்கு வந்து மாவிளக்கு பூஜை நடத்தியும் பொங்கல் வைத்து படைத்தும் வேண்டுதல் நிறைவேற்றி தரிசனம் செய்வார்கள். அதைத்தொடர்ந்து உற்சவர் அம்மன் ஆனந்தவல்லி கோயிலிலிருந்து புறப்பாடாகி சப்பரத்தேரில் எழுந்தருளி கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வருதல் நடைபெறும். 3 ஆம் தேதி கொடியிறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவு பெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...