இளையான்குடி அருகே மரங்களை வெட்ட எதிர்ப்பு: போலீஸார் குவிக்கப்பட்டதால் பதற்றம்
By DIN | Published On : 05th May 2019 01:24 AM | Last Updated : 05th May 2019 01:24 AM | அ+அ அ- |

இளையான்குடி அருகே சனிக்கிழமை கருவேல மரங்களை வெட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இளையான்குடி ஒன்றியம் சாலைக்கிராமம் பெரியகண்மாய் 353 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. இக் கண்மாய் மூலம் 335 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாயில் கடந்த 2016-ஆம் ஆண்டு வருவாய்துறைக்கு சொந்தமான பரப்பளவில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்ட ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தை கிராம கமிட்டியினர் ஏலம் எடுத்தனர். வனத்துறை அனுமதி இல்லாததால் மரங்களை வெட்ட வனத்துறை நிர்வாகம் தடை விதித்தது.
இந்நிலையில் இதே கண்மாய்க்குள் வனத்துறைக்கு சொந்தமான பரப்பளவில் வளர்ந்திருந்த கருவேல மரங்களை வெட்ட வனத்துறை நிர்வாகம் சார்பில் சில மாதங்களுக்கு முன்பு ஏலம் நடத்தப்பட்டது. தற்போது ஏலம் எடுத்தவர்கள் கண்மாய்க்குள் கருவேல மரங்களை வெட்ட வந்தனர். இதற்கு வடக்கு சாலைக்கிராமம், வலசைக்காடு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்மாய் பகுதியில் கூடி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக இளையான்குடி வட்டாட்சியர் பாலகுரு, மானாமதுரை, சிவகங்கை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்கள் கார்த்திகேயன், அப்துல்ஜபார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்மாய்க்குள் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை வெட்டுவதற்கு நீதிமன்றத்தில் தடையுத்தரவு கேட்டு மனுச் செய்துள்ளோம். அதனால் மே 8 ஆம் தேதி வரை மரங்களை வெட்டக்கூடாது என கிராம மக்கள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இக்கோரிக்கையை அதிகாரிகள் தரப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து மரங்களை வெட்டும் முடிவு கைவிடப்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...