குடிநீர் பிரச்னையை சமாளிக்க துரித நடவடிக்கை எடுக்கப்படும்: ஆட்சியர்
By DIN | Published On : 05th May 2019 01:25 AM | Last Updated : 05th May 2019 01:25 AM | அ+அ அ- |

குடிநீர் பிரச்னையை சமாளிக்க அந்தந்த பகுதியில் துறை அலுவலர்களைக் கொண்டு களப் பணியாற்றி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்துப் பேசியது : கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப் போனதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
தற்போது கோடைகாலம் என்பதால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் குடிநீர் தட்டுபாடு நிலவுவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சம்பந்தப்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளுக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக ஆலோசனைகளும், சில அவசர கால உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
ஆகவே குடிநீர் பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும்,சிவகங்கை மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க அந்தந்த பகுதியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை கொண்டு களப் பணியாற்றி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.வடிவேல், பேரூராட்சி துறை உதவி இயக்குநர் ராஜா, ஊராட்சிகள் உதவி இயக்குநர் விஜயநாதன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்கள், நகராட்சி நிர்வாகத் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...