மானாமதுரையில் ஸ்ரீசதாசிவ பிரமேந்திராள் இசை ஆராதனை விழா நிறைவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள சத்குரு ஸ்ரீ சதாசிவப் பிரமேந்திராள் அதிஷ்டானத்தில் நடைபெற்ற

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அமைந்துள்ள சத்குரு ஸ்ரீ சதாசிவப் பிரமேந்திராள் அதிஷ்டானத்தில் நடைபெற்ற இசை ஆராதனை விழாவில், செவ்வாய்க்கிழமை இசைக் கலைஞர்கள் கோஷ்டிகானம் பாடி சுவாமிக்கு குரு அஞ்சலி செலுத்தியதுடன் விழா நிறைவு பெற்றது. 
     மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பிரமேந்திராள் சுவாமி உடல் அடக்கமான இடம் உள்ளது. இங்கு, பிரமேந்திராள் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 39 ஆம் ஆண்டாக இசை ஆராதனை விழா கடந்த திங்கள்கிழமை தொடங்கியது.
     முதல் நாள் நிகழ்ச்சியில், விழா கமிட்டி நிர்வாகிகள் ஏ.ஆர்.பி. முருகேசன், ஏ. ராமையா மற்றும் விழாவுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. அதன்பின்னர், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள், பக்க வாத்தியக் கலைஞர்கள் தங்களது இசையின் மூலம் பிரமேந்திராள் சுவாமிக்கு அஞ்சலி செலுத்தினர்.
     இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலையில், பிரமேந்திராள் சுவாமி அதிஷ்டானத்துக்கு பால், பன்னீர், தேன், இளநீர், திரவியம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தி, காயத்திரி, பிரமேந்திராள் சுவாமிக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து, மலர் அலங்காரத்தில் ஆராதனைகள், சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த பூஜைகளை, குமார், ராஜேஷ் பட்டர்கள் நடத்தி வைத்தனர்.
      தொடர்ந்து, மூத்த, இளம் இசைக் கலைஞர்கள், பக்கவாத்தியக் கலைஞர்கள் ஒன்றுசேர்ந்து கோஷ்டிகானம் பாடி, பிரமேந்திராள் சுவாமிக்கு குரு அஞ்சலி செலுத்தினர்.
     அதையடுத்து, உஞ்சவிருத்தி, விக்னேஸ்வர பூஜை, வடுக பூஜை, கன்யா பூஜை, சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை ஆகியன நடத்தப்பட்டு, சுவாமிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், ஆஞ்சநேய உத்ஸவம் நடைபெற்று இந்தாண்டுக்கான பிரமேந்திராள் இசை ஆராதனை விழா நிறைவு பெற்றது.
     இவ்விழாவில் ஏராளமானோர் பங்கேற்று பிரமேந்திராள் சுவாமியை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை, விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com