ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோயிலில் பால்குட விழா
By DIN | Published On : 15th May 2019 07:35 AM | Last Updated : 15th May 2019 07:35 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கொல்லம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துநாச்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பால்குட விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே கொல்லம்பட்டி கிராமத்தில் புண்ணிய விருத்தி மரத்தின் கீழ் அமைந்துள்ள ஸ்ரீ முத்துநாச்சி அம்மன் கோயிலில் கடந்த மே 7 ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு விழா தொடங்கியது. கிராமத்தினர் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டு வந்தனர்.
திருவிழாவின் 8 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில், கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம், பால்குடம் எடுத்து ஸ்ரீமுத்துநாச்சி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் பக்தர்கள் இறங்கினர்.
அதையடுத்து, பக்தர்கள் எடுத்துவந்த பாலால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. கிராமத்தினர் கொண்டுவந்த பட்டு மற்றும் மாலைகள் அம்மனுக்கு சாத்தப்பட்டன. இதில் ஏராளமானோர் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். பின்னர், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.