அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா தேரோட்டம்
By DIN | Published On : 19th May 2019 04:18 AM | Last Updated : 19th May 2019 04:18 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே அரியக்குடி அலர்மேல்மங்கை உடனுறை திருவேங்கடமுடையான் கோயில் வைகாசிப் பெருந்திருவிழாத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தில் உள்ள இக்கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழா கடந்த மே 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் சுவாமி காலை வேளைகளில் பல்லக்கிலும், இரவு வேளைகளில் வெவ்வேறு வாகனங்களிலும் எழுந்தருளிய திருவீதியுலா நடைபெற்றது. எட்டாம் நாள் விழாவான வெள்ளிக்கிழமை காலையில் சுவாமி வெண்ணெய்த்தாழி அலங்காரத்திலும், இரவு சொர்ண குதிரைவாகனத்தில் எழுந்தருளிய திருவீதியுலாவும் நடைபெற்றது.
ஒன்பதாம் நாள் விழாவான சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காலை 7 மணிக்கு தேரில் எழுந்தருளினார். மாலையில் நாட்டார்கள், நகரத்தார்கள், பக்தர்கள் வடம் பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கி நான்குரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.
விழாவில் கோயில்அறங்காவலர் குழுத்தலைவர் ராம.ராமநாதன் செட்டியார், கோயில் செயல் அலுவலர் வீ.தமிழ்ச்செல்வி, அரியக்குடி, காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.