திருப்பத்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பால்குட விழா
By DIN | Published On : 19th May 2019 04:17 AM | Last Updated : 19th May 2019 04:17 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் காளியம்மன் கோயிலில் அமைந்துள்ள முருகன் கோயிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பால்குட விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்தில் கூடிய பக்தர்கள் அங்கிருந்து பால்குடம் ஏந்தி, சிவபெருமானை வழிபட்டு, நகரின் முக்கிய வீதிகளான பெரியகடைவீதி, செட்டிய தெரு, காளியம்மன்கோயில் தெரு வழியாக காளியம்மன் கோயிலை வலம் வந்து, முருகன் கோயிலை வந்தடைந்தனர்.
பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் முருகனுக்கு பாலாபிஷேகம் மற்றும் இளநீர், திருமஞ்சனம், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 11 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.
விழா ஏற்பாடுகளை முருகன் கோயில் கந்த ஷஷ்டி விழா குழுவினர் செய்திருந்தனர்.