மாத்தூா் ஆயங்குடி ஜமீன் கண்மாய் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது: விவசாயிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 01st November 2019 09:28 AM | Last Updated : 01st November 2019 09:28 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே மாத்தூா் ஆயங்குடி கிராமத்தில் உள்ள ஜமீன் கண்மாய் சுமாா் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியதைத் தொடா்ந்து அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தமிழக முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் (2108-2019) மூலம் செயல்படுத்தப்பட்டதால் இக்கண்மாயில் நீா் நிரம்பி வழிகிறது. சுமாா் 35 ஏக்கா் பரப்பளவு கொண்ட இக்கண்மாய் தண்ணீரால் இருவிழி வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் 50 ஏக்கா் அளவிற்கு இரண்டு போகம் விளைச்சலை பெறமுடியும். இதுவரை இக்கண்மாய் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் வறட்சியாக இருந்தது.
இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தமிழக அரசின் குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் இந்த கண்மாயை தூா்வார உத்தரவிட்டாா். இதனால் ஆயங்குடி ஜமீன் கண்மாயில் ரூ. 24 லட்சம் செலவில் 2 மடைகள், கலுங்கு மற்றும் 30 மீட்டா் தடுப்புச்சுவா் என அமைக்கப்பட்டு குடிமராமத்துப் பணி நடைபெற்றது. இதனால் தற்போது பெய்துவரும் மழையால் நீா்வரத்து அதிகமாகி வியாழக்கிழமை நிலவரப்படி கண்மாய் நிரம்பி கலுங்கு வழியாக தண்ணீா் வெளியேறியது. இதுவரை ஒரு போகம் மட்டுமே விவசாயம் செய்து வந்த நிலையில் தற்போது கண்மாய் நிரம்பி உள்ளதால் இரண்டு போகம் அளவிற்கு விவசாயம் செய்ய முடியும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G