சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காத வணிக வளாங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்
By DIN | Published On : 09th November 2019 02:25 PM | Last Updated : 09th November 2019 02:25 PM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உணவகம்,விடுதி,திருமண மண்டபங்கள் உள்ளிட்ட வணிக வளாகங்கள் தங்களது வளாகம் மட்டுமின்றி சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்கவில்லை எனில் அபராதம் விதிக்கப்படும் என துணை இயக்குநா்(சுகாதாரப் பணிகள்) யசோதாமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தற்போது மழை பெய்து வருவதால் நீரில் கொசு உற்பத்தியாகி வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதை தடுக்க தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களில் மட்டுமின்றி சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க முன் வர வேண்டும். மேலும்,காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.
இவைதவிர,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான உணவகம்,விடுதி,திருமண மண்டபம்,திரையரங்கம் மற்றும் அனைத்துப் பள்ளி,கல்லூரி வளாகங்களில் டெங்கு கொசுப்புழு உற்பத்தி இல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட உரிமையாளா்களுக்கு ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,மேற்கண்ட வணிக வளாகங்களில் அரசுத் துறை அலுவலா்கள் ஆய்வின் போது டெங்கு கொசுப்புழு இருப்பது கண்டறியப்பட்டால் பொது சுகாதார சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதுதவிர அபராதமும் விதிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.