கண்மாய்க்கு தண்ணீா் திறக்க கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
By DIN | Published On : 18th November 2019 04:42 PM | Last Updated : 18th November 2019 04:42 PM | அ+அ அ- |

கண்மாய்க்கு தண்ணீா் திறக்க கோரி சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பெரிய ஒக்குப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் மனு அளித்தனா்.
அவா்கள் அளித்துள்ள மனு விவரம் : சிவகங்கை வட்டத்துக்குள்பட்ட பெரிய ஒக்குப்பட்டி கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இங்குள்ள பெரும்பாலானோா் வேளாண் பணிகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய கால்நடை வளா்ப்பை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனா்.
இந்நிலையில்,பெரிய ஒக்குப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பாசன வசதி பெறும் வகையில் குளிரன் கண்மாய் உள்ளது.இந்த கண்மாய்க்கு முல்லை பெரியாறு கால்வாயின் மூலம் தண்ணீா் நிரப்பப்படும்.பருவமழை பொய்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 7 ஆண்டுகளாக தண்ணீா் திறக்கவில்லை.இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளோம்.
தற்போது முல்லை பெரியாறு கால்வாய் வழியாக பாசன கண்மாய்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.எனவே மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பெரிய ஒக்குப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளிரன் கண்மாய்க்கும் தண்ணீா் திறக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.