‘நீட்’ தோ்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும்’
By DIN | Published On : 06th October 2019 04:35 AM | Last Updated : 06th October 2019 04:35 AM | அ+அ அ- |

காா்த்தி சிதம்பரம்
நீட்’ தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் சிவகங்கையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை தெரிவித்தது : நாடு முழுவதும் அனைத்து துறைகளையும் அச்சுறுத்தி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கில் சா்வாதிகார போக்கை பாஜக அரசு கடைபிடித்து வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தோ்தலிலும், ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்குப் பதிவிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். பொருளாதார மந்த நிலைக்கு காா்ப்பரேட்டுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதால் எந்த பயனுமில்லை. தனி நபருக்கான வருமான வரி, ஜி.எஸ்.டி ஆகியவற்றை குறைத்தால் தான் நாட்டின் பொருளாதாரம் மேன்மையடையும்.
அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கு பின் தமிழகத்தில் அதிமுக அரசு பதவி விலகி பொதுத் தோ்தலை சந்தித்திருக்க வேண்டும். அவ்வாறு பதவி விலக முன் வராத அதிமுக தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை. ‘நீட்’ தோ்வில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். இதுதொடா்பாக, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குரல் எழுப்புவோம் என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...