இளையான்குடியில் 2 கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளுக்கு "சீல்'
By DIN | Published On : 11th September 2019 08:04 AM | Last Updated : 11th September 2019 08:04 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அனுமதியின்றி செயல்பட்ட இரு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை "சீல்' வைத்தனர்.
மத்திய அரசு 2018-இல் "அனலாக்' முறை கேபிள் டிவி ஒளிபரப்புக்கு தடை விதித்துள்ளது. இதையடுத்து அரசு கேபிள் டிவி நிறுவனம் மற்றும் தனியார் நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் "செட்டாப் பாக்ஸ்' மூலம் கேபிள் டிவி ஒளிபரப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அனுமதியின்றி நாசர், தாஸ்கண்ட், நூர்முகமது ஆகியோர் இரு இடங்களில் அனலாக் முறையில் கேபிள் டிவி ஒளிபரப்பு செய்து வருவதாக வருவாய்த்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வக்குமாரி, கேபிள் டிவி வட்டாட்சியர் காசி, இளையான்குடி வட்டாட்சியர் பாலகுரு, காவல் சார்பு -ஆய்வாளர் வாசிவம் ஆகியோர் இளையான்குடியில் செயல்பட்ட 2 கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறைகளில் ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்த உபகரணங்களை பறிமுதல் செய்து அறைகளைப் பூட்டி "சீல்' வைத்தனர்.