சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 11th September 2019 08:04 AM | Last Updated : 11th September 2019 08:04 AM | அ+அ அ- |

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கையில் காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் வழக்குரைஞர் பிரிவின் மாவட்டத் தலைவர் த.அப்துல் சித்திக் தலைமை வகித்தார். மாநில வழக்குரைஞர் பிரிவுச் செயலர் ரமேஷ் கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், பழி வாங்கும் நோக்கோடு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்தும், பாஜக அரசின் தவறான கொள்கைகளால் நாட்டில் நிலவும் வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி குறித்தும் கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், மகளிரணி மாநிலத் துணைத் தலைவி வித்யா கணபதி, மூத்த வழக்குரைஞர்கள் ராம் பிரபாகர், கணேசன், முத்துக்குமார், பிரகாஷ்ராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட துணைத் தலைவர் மதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.