நவீன தொழில்நுட்பத்தில் குறைந்த அளவு நீரில் வேளாண்மை: ஆட்சியர் வலியுறுத்தல்

நவீன தொழில்நுட்பங்களின் மூலம் வேளாண் பணிகளுக்கு குறைந்த அளவு நீரை பயன்படுத்த விவசாயிகள்
Updated on
1 min read

நவீன தொழில்நுட்பங்களின் மூலம் வேளாண் பணிகளுக்கு குறைந்த அளவு நீரை பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் தென்னை உற்பத்தியாளர்கள் நிறுவனம் சார்பில் உலக தென்னை விழா-2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சிறப்பு விருந்திரனாகக் கலந்து கொண்டு பேசியது: இன்றைய கடுமையான போட்டி உலகில் வேலைவாய்ப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. ஆகவே இளம் தலைமுறையினர் வேளாண் தொழிலை மேற்கொள்ள முன் வர வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. அந்த திட்டங்கள் முழுவதும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை பருவ காலங்களில் அதிகளவு மழைப் பொழிவு பதிவாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. ஆகவே சொட்டு நீர் பாசனம், தெளிப்பு நீர் பாசனம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பகளின் மூலம் வேளாண் பணிகளுக்கு குறைந்த அளவு நீரை பயன்படுத்த விவசாயிகள் முன் வர வேண்டும். இதன் மூலம் அதிக பரப்பளவில் வேளாண் பணிகள் மேற்கொள்வது மட்டுமின்றி விவசாயிகளுக்கு போதிய வருமானமும் கிடைக்கும் என்றார். முன்னதாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரி சுந்தரம் நகரில் உள்ள நினைவு வளைவிலிருந்து முழக்கமிட்டவாறு விவசாயிகள் பேரணியாக வந்தனர். அதைத் தொடர்ந்து,கருத்தரங்கம் நடைபெற்றது. 
தென்னை விவசாயம் சார்ந்த கண்காட்சியை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தொடக்கி வைத்துப் பார்வையிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com