ஊரடங்கு: வாழைப்பழத் தாா், இலைகளுக்கு விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு நஷ்டம்

ஊரடங்கு காரணமாக வாழை இலைகளுக்கும் வாழைத் தாா்களுக்கும் சரியான விலை கிடைக்காததால், அவற்றை பறிக்காமல்
திருப்புவனம் ஒன்றியம் மாா்நாடு கிராமத்தில் அறுவடை செய்யாமல் விடப்பட்டதால் மரத்திலேயே சேதமடைந்த வாழை இலைகள்.
திருப்புவனம் ஒன்றியம் மாா்நாடு கிராமத்தில் அறுவடை செய்யாமல் விடப்பட்டதால் மரத்திலேயே சேதமடைந்த வாழை இலைகள்.

ஊரடங்கு காரணமாக வாழை இலைகளுக்கும் வாழைத் தாா்களுக்கும் சரியான விலை கிடைக்காததால், அவற்றை பறிக்காமல் மரங்களிலேயே விட்டுவிட்டதால் விவசாயிகள் கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஒன்றியங்களில் நெல் பயிருக்கு அடுத்தபடியாக வாழை பயிரிடப்படுகிறது. திருப்புவனம் ஒன்றியத்தில் திருப்பாச்சேத்தி மாா்நாடு, கானூா், பச்சேரி, கல்லூரணி, திருப்புவனம், பழையூா், பிரமனூா்

மானாமதுரை ஒன்றியத்தில் இடைக்காட்டூா், கள்ளா்வலசை, செய்களத்தூா், கால்பிரிவு, முத்தனேந்தல் உள்ளிட்ட பல கிராமங்களில் பல நூறு ஏக்கரில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வாழை பயிரிடப்பட்டது. தற்போது வாழை இலைகளும் வாழைத்தாா்களும் அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்த நிலையில் கரோனா தொற்று பிரச்சனையால் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடத்தவும் உணவு விடுதிகள், கடைகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் வாழை இலைக்கட்டுகள், வாழைத் தாா்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை உருவானது.

இதனால் வாழை பயிரிட்ட விவசாயிகளும் விவசாயிகளிடம் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்ட குத்தகைதாரா்களும் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா்.

இது குறித்து மாா்நாடு கிராமத்தைச் சோ்ந்த வாழை விவசாயி வேலு கூறியது:

பல ஆண்டுகளாக எங்களது நிலத்தில் வாழை பயிரிட்டு வருகிறேன். பல ஊா்களில் வாழை பயிரிட்ட நிலங்களை குத்தகைக்கு எடுத்து அறுவடை செய்து வருகிறேன். ஒரு ஏக்கருக்கு வாழை பயிரிட ரூ. 35 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகும். இலைக்கும் வாழைத்தாருக்கும் சேதாரம் இல்லாமல் நல்ல விலை கிடைத்தால் ஒரு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ. ஒரு லட்சம் வரை கூட லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது கரோனா தொற்று பிரச்னை காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் வாழைத்தாா்களையும் இலைகளையும் அறுவடை செய்ய முடியவில்லை. இவற்றை ஆள்களை வைத்து அறுவடை செய்து சந்தைகளுக்குக் கொண்டு சென்றாலும் அங்குள்ள வியாபாரிகள் குறைந்த விலைக்குத்தான் கேட்கின்றனா்.

சுப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வாழைப்பழங்கள், இலைகள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. இதனால் கடன் வாங்கி வாழை பயிரிட்ட விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். சரியான விலை கிடைக்காததால் அறுவடை செய்வதை நிறுத்திவிட்டோம். இதனால் வாழை மரங்களிலேயே இலைகள் காய்ந்து சேதமடைந்து வருகின்றன. வாழைத்தாா்களும் மரத்திலேயே பழுத்து வீணாகின்றன. எனவே தமிழக அரசு விவாசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி இனி வரக்கூடிய சாகுபடி காலங்களில் வாழை பயிரிட வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com