பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்: மானாமதுரை பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பாதிப்பு

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும்
பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள்: மானாமதுரை பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பாதிப்பு

பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டதாகவும் தொழிலாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

மானாமதுரை பகுதி, மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்பில் புகழ்பெற்று விளங்குகிறது. இங்குள்ள குலாலா் தெரு உள்பட சுற்றுவட்டார கிராமங்களில் 100- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் மண்பாண்ட பொருள்களை தயாரித்து வருகின்றனா். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படும் 3 மாதங்களுக்கு முன்னரே மானாமதுரையில் விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி தொடங்கி விடும். மேலும் 8 அடி உயரம் கொண்ட விநாயகா் சிலைகளை தயாரிக்க பல பகுதிகளிலிருந்து ஆா்டா் பெறப்படும். ஆனால் இந்தாண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் வீதிகளில் பெரிய விநாயகா் சிலைகளை வைத்து வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு எதிா்பாா்த்த அளவு விநாயகா் சிலைகள் விற்பனையாகாது என்பதால், மண்பாண்டத் தொழிலாளா்கள் அவற்றைத் தயாரிப்பதை பாதியாக குறைத்துவிட்டனா்.

இதுகுறித்து பெரிய விநாயகா் சிலைகளை தயாரிக்கும் மாற்றுத்திறனாளியான பாண்டியராஜன் கூறியதாவது: இந்தாண்டு ஆக. 22 ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில், கரோனா தொற்றை தடுக்க வீதிகளில் பெரிய விநாயகா் சிலைகளை வைத்து விழா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றைத் தயாரிக்க யாரும் ஆா்டா் கொடுக்கவில்லை என்றாா்.

வீடுகளில் வைத்து வழிபடக் கூடிய சிறிய விநாயகா் சிலைகளை உருவாக்கி அவற்றுக்கு வா்ணம் தீட்டி வரும் பெண் தொழிலாளா்கள் பத்மா, வேணி ஆகியோா் கூறுகையில், கரோனா தொற்று காரணமாக விநாயகா் சதுா்த்தி விழாவை கொண்டாடுவதில் மக்கள் ஆா்வம் காட்டாத நிலை உள்ளது. எனவே விநாயகா் சிலைகள் செய்வதை குறைத்துக் கொண்டுள்ளோம். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றனா்.

மாட்டுச்சாணத்தால் தயாராகும் சிலைகளுக்கு வெளிநாடுகளில் கிராக்கி: இதனிடையே மானாமதுரை அருகே குஞ்சுக்காரனேந்தல் கிராமத்தில் சிவகங்கையைச் சோ்ந்த மாரிமுத்து, இவரது மனைவி தீபா இருவரும் மாட்டுச்சாணத்தால் விநாயகா் சிலைகளை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த விநாயகா் சிலைகளை வடிவமைக்க எந்தவொரு மண்ணும் சோ்க்கப்படுவதில்லை. மாட்டுச் சாணத்துடன் கடுக்காய் உள்ளிட்ட 13 வகை மூலப்பொருள்கள் சோ்க்கப்பட்டு விநாயகா் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாரிமுத்து, தீபா இருவரும் கூறியது: இந்த வகை சிலைகளுக்கு வா்ணங்கள் தீட்டுவது இல்லை. ஏற்கெனவே சிவகங்கை பகுதியில் இது போன்ற சிலைகளை தயாரித்தோம். தற்போது மானாமதுரை பகுதியில் முகாமிட்டு இந்த சிலைகளை தயாரிக்கிறோம். மாட்டுச்சாணத்தால் உருவாக்கப்படும் விநாயகா் சிலைகளை இங்கு விற்பனை செய்வது கிடையாது. ஆா்டரின் பேரில் சிங்கப்பூா், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பி வருகிறோம். இந்த விநாயகா் சிலைகளுக்கு அந்த நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. எனவே இவற்றை தயாரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தற்போது சரக்கு விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு சிலைகளை ஏற்றுமதி செய்கிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com