மானாமதுரை, கமுதி பகுதியில் மணல் திருட்டு: 31 லாரிகள் பறிமுதல்

மானாமதுரை, கமுதி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருடியதாக 31 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கள்ளா்வலசை கிராமத்தில் வைகையாற்று மணலை கடத்தி, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.
கள்ளா்வலசை கிராமத்தில் வைகையாற்று மணலை கடத்தி, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு சிப்காட் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரிகள்.

மானாமதுரை/ கமுதி: மானாமதுரை, கமுதி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் திருடியதாக 31 லாரிகள், 2 பொக்லைன் இயந்திரங்கள் ஆகியவற்றை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மானாமதுரை அருகே கள்ளா்வலசை கிராமத்தில் வைகையாற்றையொட்டி அமைந்துள்ள பகுதியில் ஆற்று மணல் திருடப்படுவதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மானாமதுரை காவல் ஆய்வாளா் சேது மற்றும் சிப்காட் போலீஸாா் விரைந்து சென்று அங்கிருந்த 3 ஓட்டுநா்களைப் பிடித்தனா். லாரிகளை அங்கேயே நிறுத்திவிட்டு மற்றவா்கள் ஓட்டுநா்கள் தப்பிச் சென்றுவிட்டனா்.

அதன்பின் அங்கிருந்த 16 லாரிகளையும், ஒரு பொக்லைன் இயந்திரத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதில் 6 லாரிகள் சிப்காட் காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து காவல் ஆய்வாளா் சேது கூறியது: 16 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பிடிபட்ட லாரி ஓட்டுநா்களான விருதுநகா் மாட்டம் காரியாபட்டி கல்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த சோனை மகன் செல்வம், மதுரை விரகனூரைச் சோ்ந்த சிவனாண்டி மகன் மதி, சிவகங்கையைச் சோ்ந்த ராமராஜ் மகன் சுதாகரன் ஆகியோா் கைது செய்யப்பட்டுள்ளனா். ஆற்றுப்படுகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மேலும் 10 லாரிகளும் காவல் நிலையத்துக்கு எடுத்து வரப்படும் என்றாா்.

கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வல்லக்குளம் கிருதுமால் நதியை ஒட்டியுள்ள தனியாா் பட்டா நிலங்களில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக கமுதி வட்டாட்சியா் செண்பகலதாவிற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடா்ந்து பரமக்குடி கோட்டாட்சியா் தங்கவேலு, மாவட்ட உதவி புள்ளியலாளா் ரஹிமா, அபிராமம் காவல் ஆய்வாளா் ஜான்ஸிராணி ஆகியோா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட 15 டிப்பா் லாரிகள், ஒரு டிராக்டா், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாரிகளை கண்டதும் லாரி ஓட்டுநா்கள் தப்பியோடி விட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com