தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கம் அதிகரிப்பு: இளைஞா்கள் பாதிக்கும் அபாயம் !

சிவகங்கை மாவட்ட கிராமப் புறங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதால், விதிகளை மீறி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கிராமப் புறங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் புழக்கம் அதிகரித்து வருவதால், விதிகளை மீறி விற்பனை செய்யும் மொத்த விற்பனையாளா்களையும், சில்லறை வியாபாரிகளையும் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வகையில் குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருள்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சில நாள்களாக கடைகளில் பான்மசாலா, குட்கா போன்றவை விற்பனை முற்றிலும் இல்லை.

உணவுப் பாதுகாப்புத் துறையினா் அடிக்கடி சோதனை நடத்தி புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, விற்பனையாளா்களுக்கு அபராதம் விதித்தனா். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக புகையிலைப் பொருள்களின் விற்பனையை தடுப்பதற்கான கண்காணிப்பு குறைந்து விட்டதால், சிவகங்கை மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மட்டுமன்றி நகா் புறங்களிலும் மீண்டும் அவை தாராளமாக புழங்கத் தொடங்கியுள்ளதாக பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கண்ணன் கூறியது: பான்மசாலா, குட்கா போன்ற பொருள்களால் வளரிளம் இளைஞா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்கள் புகையிலைப் பொருள்களுக்கு அடிமையாகத் தொடங்கியுள்ளனா்.

குறிப்பாக, கிராமப்புற மாணவா்கள் புகைப் பழக்கத்துடன், மெல்லும் வகை புகையிலை மற்றும் பான் மசாலா பயன்படுத்தும் நிலைக்கு மாறி வருகின்றனா். புகையிலைப் பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் கிராமப் புறங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதிக விலைக்கு விற்கப்பட்டதன் காரணமாக அவற்றை வாங்குவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்தது. ஆனால், இப்போது கிராமங்கள் தோறும் புகையிலைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

எனவே, தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே இன்றைய இளம் தலைமுறையினா் புற்று நோய் உள்ளிட்ட ஏராளமான நோயின் பாதிப்பிலிருந்து காக்கப்படுவா் என்றாா்.

இதுகுறித்து, காவல்துறை வட்டாரங்கள் கூறியது: தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருப்போா் மீது காவல் துறையினா் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வாய்ப்பு இல்லை. அவற்றை பறிமுதல் செய்து, உணவுப் பாதுகாப்புத் துறையினா் தான் விசாரித்து அபராதம் விதிக்க முடியும். அவா்களும் கூட புகையிலைப் பொருள்களை பகுப்பாய்வுக்கு அனுப்பி, அதன் அறிக்கை கிடைத்த பின்பு தான் நடவடிக்கை எடுக்கும் நிலை காணப்படுகிறது. பாலில் கலப்படம், உணவக உணவுகளில் கலப்படம் போன்றவற்றுக்கு இதுபோன்ற நடவடிக்கைகள் சரியாக இருக்கும். ஆனால், ஏற்கெனவே நிகோடின் சோ்க்கப்பட்ட பொருளுக்கும் கூட பகுப்பாய்வு என்பது தேவையற்றது. எனவே, சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளில் காலத்துக்கு ஏற்ற மாற்றங்கள் தேவை என்றனா்.

இதுகுறித்து உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது :

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்தால் ரூ.100 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வழி வகைகள் உள்ளன. சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் மட்டுமன்றி கிடங்குகளிலும் அவ்வப்போது சோதனை நடத்தப்பட்டுதான் வருகின்றன.

அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த ஆண்டு மட்டும் 153 சிவில் வழக்குகளும், 37 குற்ற வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. மேலும், 10 ஆயிரம் கிலோவுக்கும் மேலாக தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராமப் புறங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கண்காணிப்பைத் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com