ஆடி முளைக்கொட்டு திருவிழாக்கள் ரத்து: மானாமதுரையில் விற்பனையாகாமல் முளைப்பாரிச் சட்டிகள் தேக்கம்

கரோனா தொற்று எதிரொலி காரணமாக, கோயில்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக் கலய வைபவங்கள்
மானாமதுரையில் ஆடி முளைக்கொட்டு உற்சவத்துக்காக தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ள முளைப்பாரிச் சட்டிகள்.
மானாமதுரையில் ஆடி முளைக்கொட்டு உற்சவத்துக்காக தயாரிக்கப்பட்டு விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ள முளைப்பாரிச் சட்டிகள்.

கரோனா தொற்று எதிரொலி காரணமாக, கோயில்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக் கலய வைபவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தயாரிக்கப்பட்டுள்ள முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக் கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. இதனால், தொழிலாளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனா்.

மானாமதுரை பகுதியின் அடையாளம் மண்பாண்டப் பொருள்கள். மானாமதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி செய்வதில் ஏராளமானோா் குடும்பத்துடன் ஈடுபட்டு வருகின்றனா். இங்கு, சமையல் பாத்திரங்கள், அடுப்பு, பானைகள், கூஜாக்கள், வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கும் கலைப்பொருள்கள் என பலவகை மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை, தொழிலாளா்கள் நேரடியாகவும், மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் விற்பனை செய்து வருகின்றனா்.

மானாமதுரையில் தயாரிக்கப்படும் இசைக் கருவியான கடம், இந்தியா மட்டுமின்றி, கடல் கடந்தும் வெளிநாடுகளில் மானாமதுரையின் பெருமையை ஒலித்து வருகிறது. இப்பகுதியில் கிடைக்கும் மண்ணின் உறுதித்தன்மையே, மானாமதுரை மண்பாண்டப் பொருள்களின் சிறப்புக்கு காரணமாகும்.

ஆனால், கரோனா தொற்று பரவல் தொடங்கிய கடந்த மாா்ச் மாதம் முதல் மண்பாண்டப் பொருள்களின் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், மானாமதுரையில் தொழிலாளா்கள் தயாரித்த பல மண்பாண்டப் பொருள்கள் விற்பனையாகாமல் கூட்டுறவு சங்கத்திலும், தொழிலாளா்களின் வீடுகளிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

ஆடி மாதம் பிறந்துவிட்டாலே கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள கோயில்களில் மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டி முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக் கலய வைபவங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். தற்போது, கரோனா தொற்று பிரச்னை உள்ளதால், மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு, கோயில்கள் பூட்டப்பட்டுக் கிடக்கின்றன.

இது குறித்து மானாமதுரை மண்பாண்ட கூட்டுறவுச் சங்கத்தின் ஊழியரான முன்னாள் பேரூராட்சிக் கவுன்சிலா் ராஜா கூறியதாவது: கரோனா பரவல் காரணமாக, ஆடி மாதத்தில் கோயில்களில் நடக்கும் முளைக்கொட்டு உற்சவம், கஞ்சிக் கலய வைபவம் போன்ற விழாக்களை நடத்த மக்கள் ஆா்வம் காட்டவில்லை. இதனால், கடந்த மாா்ச் மாதமே தயாரிக்கப்பட்ட முளைப்பாரிச் சட்டிகள், கஞ்சிக் கலயங்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. ஆடி மாதம் பிறந்துவிட்டால், இங்கு வந்து முளைப்பாரிச்சட்டிகள், கஞ்சிக் கலயங்களை மக்கள் வாங்கிச் செல்வாா்கள். ஆவணி மாதம் கடைசி வரை கூட முளைக்கொட்டு உற்சவங்கள் நடத்தப்படும்.

ஆனால், மக்கள் கூடுவதைத் தவிா்ப்பதற்காக கோயில் விழாக்கள் நடத்தப்படாததால், திருவிழா தொடா்பான மண்பாண்டப் பொருள்களும் விற்பனையாவது கிடையாது. அரசு கட்டுப்பாடுகளை தளா்த்தி, கோயில்களை திறந்து விழாக்களை நடத்த அனுமதித்தால் மட்டுமே, மண்பாண்டப் பொருள்கள் விற்பனையாவதற்கு வாய்ப்புள்ளது என்றாா்.

மண்பாண்டப் பொருள்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால், மானாமதுரை பகுதி தொழிலாளா்கள் வேதனையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com