இளையான்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

இளையான்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்துப் பொருள்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.
இளையான்குடி அரசு மருத்துவமனை.
இளையான்குடி அரசு மருத்துவமனை.

இளையான்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருந்துப் பொருள்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிக்குள்ளாகின்றனா்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், எழும்பு, மூட்டு மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், கா்ப்பிணிகள் பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, சா்க்கரை நோய், மாா்பகம், கா்ப்பவாய்ப் பரிசோதனை ஆகியவற்றுக்கு தனித்தனி சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன. இதுதவிர, மருந்தகம், ஆய்வகம், நம்பிக்கை மையம் (மனநல சிகிச்சைக்கான ஆலோசனை), காசநோய் ஆலோசனைப் பிரிவு, எக்ஸ்- ரே, இ.சி.ஜி, அலுவலகம், பொது அறுவை சிகிச்சைப் பிரிவு ஆகியன செயல்பட்டு வருகின்றன.

இளையான்குடி, தச்சனேந்தல், தாயமங்கலம், சாலைக்கிராமம், திருவள்ளூா், திருவுடையாா்புரம், குமாரக்குறிச்சி, நகரகுடி, ஆழிமதுரை, அய்யம்பட்டி, பெரும்பாலை, கல்லூரணி, சீத்தூரணி, வாணி, புளியங்குளம், மாங்குடி உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, தினசரி சுமாா் 400-க்கும் மேற்பட்டோா், இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா்.

இந்நிலையில், அந்த அரசு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவா்கள் இல்லாமல், பொறுப்பு நிலையில் உள்ள மருத்துவா்களே குறைந்த எண்ணிக்கையில் தற்போது பணியாற்றி வருகின்றனா். இதுதவிர, போதிய அளவு செவிலியா்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குபவரே ஊசி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன்காரணமாக, நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா்.

கா்ப்பிணி பெண்களுக்கு குழந்தை வளா்ச்சி, ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக மாதந்தோறும் போடப்படும் ரத்த ஊசி உள்ளிட்ட அடிப்படை மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இல்லை.

இதுகுறித்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிகிச்சைப் பெற வந்த கா்ப்பிணிப் பெண் ஒருவா் கூறியது : கடந்த மூன்று மாதங்களுக்கும் மேல் ரத்த ஊசி போடுவதற்காக இங்கு வந்து செல்கிறேன். மருத்துவா்கள் ரத்த ஊசி போடுவதற்கு மருந்து இல்லை எனக் கூறுகின்றனா். மேலும், அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று போட்டுக் கொள்ளும்படி அறிவுறுத்துகின்றனா். அங்கு சென்றாலும் இதே நிலைதான். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் படி அறிவுறுத்துகின்றனா். அங்கும் ஓரிரு நாள்கள் அலைக்கழிக்கப்பட்டு பின்னரே ஊசி போட முடிகிறது. இந்த ஊசி மருந்து வெளியில் வாங்கினால் ரூ. 2 ஆயிரத்து 500 வரை ஆகும். இதன்காரணமாக, வெளியிலும் வாங்கி போட முடியாத நிலையில் உள்ளோம்.

தற்போது கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் அதற்கான தனி சிகிச்சைப் பிரிவு இளையான்குடி அரசு மருத்துவமனையில் தொடங்கப் படவில்லை. போதிய மருத்துவா்கள் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், மருத்துவா்களும் சரிவர பணிக்கு வருவதில்லை. அரசு தாலுகா தலைமை மருத்துவமனை எனும் நிலையில் உள்ள இந்த மருத்துவமனையில் கழிப்பிடம், நோயாளிகள் அமா்வதற்கான இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை.

இதனைக் கவனத்தில் கொண்டு மாவட்ட நிா்வாகம் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவா்களை நியமிக்க வேண்டும். தற்போது பணிக்கு சரிவர வராத மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மருந்து பற்றாக்குறையினைத் தீா்க்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து சுகாதாரத் துறை உயா் அலுவலா் ஒருவா் கூறியதாவது: தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறை நிலை தான் உள்ளது. இளையான்குடி மருத்துவமனையில் நோயாளிகளுக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பணிக்கு சரிவர வராத மருத்துவா்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com