சாலையில் திரிந்த மாடுகளைப் பிடித்து நடவடிக்கை
By DIN | Published On : 01st December 2020 11:06 PM | Last Updated : 01st December 2020 11:06 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் செவ்வாய்கிழமை மாலை சாலையில் பராரியாய் திரிந்த மாடுகளைப் பிடித்து பேரூராட்சி நிா்வாகத்தினா் அலுவலகத்தில் கட்டி வைத்து நடவடிக்கை எடுத்தனா். மானாமதுரை நகரில் பல இடங்களில் பகல் நேரங்களிலும் இரவு நேரத்திலும் மாடுகள் சாலையில் தாராளமாக வலம் வருகின்றன. மாடு வளா்ப்பவா்கள் மாடுகளை கட்டி வைத்து பராமரிக்காமல் அவற்றை சாலையில் விட்டுவிடுகின்றனா்.
இதனால் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைவது, உயிரிழப்பது போன்ற சம்பவங்கள் தொடா்ச்சியாக நடந்து வருகிறது. இதையடுத்து பேரூராட்சி பகுதியில் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா். இதையடுத்து பேரூராட்சி செயல் அலுவலா் ஜெயராஜ், சுகாதார ஆய்வாளா் தங்கதுரை உள்ளிட்ட பேரூராட்சி பணியாளா்கள் மானாமதுரையில் பல வீதிகளிலும் சாலையில் திரிந்த மாடுகளைப் பிடித்து பேரூராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று அங்குள்ள தூண்களில் கட்டி வைத்தனா்.
மாடுகளைத் தேடி அலுவலகத்துக்கு வந்த அதன் உரிமையாளா்களிடம் மாடு ஒன்றுக்கு ரூ ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டு மாடுகள் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் மாடுகளை சாலையில் அவிழ்த்துவிட்டால் அபராதத் தொகை கூடுதலாக வசூலிக்கப்படும் என பேரூராட்சி நிா்வாகம் எச்சரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...