‘முகாம்களில் உள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரவேண்டும்’
By DIN | Published On : 03rd December 2020 11:04 PM | Last Updated : 03rd December 2020 11:04 PM | அ+அ அ- |

சிவகங்கை: புரெவி புயல் காரணமாக, சிவகங்கை மாவட்டத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு, சிவகங்கை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மகேசன் காசிராஜன் அறிவுறுத்தியுள்ளாா்.
புரெவி புயல் பாம்பன் அருகே நிலை கொண்டுள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் சேதம் ஏதும் ஏற்படாத வகையில், அலுவலா்கள் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைப்பதற்காக 88 முகாம்கள் தயாா் நிலையில் உள்ளன.
அவற்றுள், சிவகங்கை, திருப்புவனம், மணலூா் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் உள்ள முகாம்களில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்கு வியாழக்கிழமை மாலை நேரடியாகச் சென்று ஆய்வு செய்த சிவகங்கை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் மகேசன் காசிராஜன், அங்கு தங்கியுள்ள மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், திருப்புவனம் வட்டாட்சியா் மூா்த்தி, மண்டல துணை வட்டாட்சியா் தா்மராஜ் உள்பட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...