சிவகங்கையில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை ஆட்சியா் ஆய்வு
By DIN | Published On : 05th December 2020 10:25 PM | Last Updated : 05th December 2020 10:25 PM | அ+அ அ- |

சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனைத்து அரசியல் கட்சியினா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை: சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூா், மானாமதுரை (தனி) ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளுக்கு தேவையான 3,442 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,236 கட்டுப்பாட்டு கருவிகள், 2,414 வாக்குப்பதிவு விவரம் குறித்த இயந்திரங்கள், சிவகங்கை வட்டாட்சியா் அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள அனைத்து இயந்திரங்களையும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகா்கள் முன்னிலையில், ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி ஆய்வு செய்தாா். அதைத் தொடா்ந்து, சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு பணி காரணமாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபாா்க்கும் பணி, ஏற்கெனவே உள்ள சின்னங்கள் அகற்றும் பணி ஆகியன அனைத்துக் கட்சியினா் முன்னிலையில் நடைபெற உள்ளன.
அப்போது, காவல் துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது மட்டுமின்றி, வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாகவும் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, வருவாய் கோட்டாட்சியா் முத்துக்கழுவன், வட்டாட்சியா்கள் கந்தசாமி (தோ்தல்) ), மைலாவதி (சிவகங்கை), அரசு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.