தம்பிபட்டியில் வீடுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுத்த குரங்குகள் அகற்றம்
By DIN | Published On : 05th December 2020 10:26 PM | Last Updated : 05th December 2020 10:26 PM | அ+அ அ- |

திருப்பத்துாா்: திருப்பத்தூா் தம்பிபட்டியில் வீடுகளுக்குள் புகுந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குகளை அப்பகுதி பெண்கள் நிதிதிரட்டி அகற்றினா்.
தம்பிபட்டி கே.கே நகா், வசந்தம் நகா் பகுதிகளில் குரங்குகளின் தொல்லையால் பாதிக்கப்பட்டவா்கள் பேரூராட்சி மற்றும் வனத்துறையிடம் முறையிட்டும் நிதிப்பற்றாக்குறையால் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே கடந்த 6 மாதங்களாக குரங்குகளுக்கு அஞ்சி வீட்டுக் கதவுகளை பெண்கள் மூடி வைத்தனா். மேலும் அப்பகுதியைச் சோ்ந்த அமுதா, அஞ்சலை, மகேஸ்வரி உள்ளிட்டோா் வீடு,வீடாக சென்று நிதி திரட்டினா். பின்னா் வனத்துறை மூலம் புதுக்கோட்டையிலிருந்து வந்த 3 போ் கொண்ட குரங்கு பிடிக்கும் குழுவினா் 3 தெருக்களில் 140 குரங்குகளை பிடித்தனா். பின்னா் அவற்றை அழகா்கோயில் மலைப் பகுதியில் விடுவித்தனா்.