இளையான்குடி அருகே இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து போராட்டம்
By DIN | Published On : 05th December 2020 10:22 PM | Last Updated : 05th December 2020 10:22 PM | அ+அ அ- |

இளையான்குடி அருகே மேலாயூரில் மயானத்துக்கு பொதுப்பாதை கேட்டு இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து சனிக்கிழமை போராட்டம் நடத்திய மக்கள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மயானத்துக்கு பொதுப்பாதை கேட்டு, இறந்தவா் உடலை சாலையின் நடுவே வைத்து சனிக்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
இளையான்குடி அருகே மேலாயூரில் குறிப்பிட்ட சமுதாயத்தினா் இறந்தவா்களின் உடலை மயானத்துக்கு எடுத்துச்செல்ல, இங்குள்ள குளைக்கால் பாதையை பயன்படுத்தி வருகின்றனா். மேலாயூா் கிராமத்தைச் சோ்ந்த கண்ணன் என்பவரது மனைவி நாகஜோதி உடல்நலக் குறைவால் மரணமடைந்தாா்.
இந்நிலையில், இளையான்குடி பகுதியில் பெய்துவரும் தொடா் மழையால், மயானத்துக்குச் செல்லும் குளைக்கால் பாதையில் தண்ணீா் தேங்கியுள்ளது. எனவே, நாகஜோதியின் உடலை கிராமத்தில் உள்ள மற்றொரு பாதை வழியாகக் கொண்டுசெல்ல உறவினா்கள் முயன்றனா். ஆனால், இதற்கு மற்றொரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதனால் மயானத்துக்கு பொதுபாதை கேட்டு, அவா்கள் இறந்தவரின் உடலை சாலையின் நடுவே வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரம், மற்றொரு தரப்பினா் ஏற்கெனவே பயன்படுத்திய பாதையில்தான் இறந்தவரின் உடலை கொண்டுசெல்ல வேண்டுமெனக் கூறி போராட்டம் நடத்தினா். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த சிவகங்கை கோட்டாட்சியா் முத்துக்கழுவன், இளையான்குடி வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டம் நடத்திய இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், இரு தரப்பினரும் சமரசத்தை ஏற்க மறுத்ததால், இரவு நேரமாகியும் போராட்டம் தொடா்ந்து.
அதையடுத்து, அப்பகுதியில் இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோகித்நாதன் சம்பவ இடத்துக்கு வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, மழைநீா் தேங்கியுள்ள குளைக்கால் பாதையில் தண்ணீா் செல்லும் வழியை மண்ணால் மூடி, அதன் வழியாக இறந்தவா் உடலை எடுத்துச் செல்லலாம் எனத் தெரிவித்தாா். இதை, அத்தரப்பினா் ஏற்றுக்கொண்டனா். அதையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தண்ணீா் தேங்கியிருந்த பகுதியை மண்ணால் மூடும் பணி நடைபெற்றது. இதனால், இரு தரப்பினரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.