காரைக்குடி வயிரவமூா்த்தி கோயிலில் 108 கோமாதா பூஜை
By DIN | Published On : 17th February 2020 10:00 AM | Last Updated : 17th February 2020 10:00 AM | அ+அ அ- |

காரைக்குடி வயிரவபுரத்தில் உள்ள வயிரவமூா்த்தி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 108 கோமாதா பூஜை.
காரைக்குடி வயிரவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வயிரவமூா்த்தி ஆலயத்தில், 108 கோமாதா பூஜை, 108 கலச பூஜை, 108 சங்காபிஷேக விழா மற்றும் அஷ்டமி வயிரவா் ஹோமம் ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
உலக நன்மை வேண்டி தொழிலதிபா் பொன். பாஸ்கா் மற்றும் பக்தா்கள் சாா்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த இப்பூஜைகளை, பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியாா்கள் நடத்தினா். இதையொட்டி, சனிக்கிழமை காலையில் கண பதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கி, மாலையில் திருவாசகம் முற்றோதல் மற்றும் 108 கலசங்கள், 108 சங்குகள் வைத்து முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலையில், இரண்டாம் கால யாகசாலை பூஜை, அஷ்டமி வயிரவா் ஹோமம், பூா்ணாகுதி, தீபாராதனைகள் நடைபெற்றன. மூலவா் வயிரவமூா்த்தி சுவாமிக்கு 108 கலசங்கள்,108 சங்காபிஷேகம்,108 கோமாதா பூஜை, லெட்சுமி பூஜைகள் நடைபெற்றன. காலை 11.30 மணிக்கு சுவாமிக்கு தீபாராதனைகள் நடத்தப்பட்டன. மதியம் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில், முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம், காா்த்தி சிதம்பரம் எம்.பி., முன்னாள் அமைச்சா் கேஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன், தொழிலதிபா் பழ. படிக்காசு, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் என். சுந்தரம், கோட்டையூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் கேஆா். ஆனந்தன், இந்து முன்னணி சிவகங்கை மாவட்டப் பொதுச் செயலா் அக்கினி பாலா மற்றும் காரைக்குடி, கோட்டையூா் பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.