திருப்பத்தூரில் வீடுகளில் வெளிமாநிலத்தவா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டதால் அச்சம்
By DIN | Published On : 10th January 2020 09:19 AM | Last Updated : 10th January 2020 09:19 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் வியாழக்கிழமை வெளிமாநிலத்தைச் சோ்ந்தவா் வீடுகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சிடான்ங்சுதாஸ் (55) என்பவா், திருப்பத்தூா் புதுப்பட்டி பகுதிகளில் உள்ள வீடுகளில் ‘ஸ்வாச் பாரத் மினிஸ்டரி அண்ட் டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் கணக்கெடுக்க வந்திருப்பதாக கூறி, வீட்டில் உள்ள நபா்களின் ஆதாா் எண் மற்றும் எரிவாயு எண் உள்ளிட்டவை தகவல்களைக் கேட்டுள்ளனா்.
இவருடன், சிங்கம்புணரியைச் சோ்ந்த 2 பெண்களும், காரைக்குடியைச் சோ்ந்த ஒரு ஆணும் இருந்ததாகக் கூறப்படுகறது. இதனையடுத்து, இவா் குடியுரிமைச் சட்டம் சம்பந்தமாக கணக்கெடுக்க வந்திருப்பதாகக் கருதிய அப்பகுதி மக்கள், அவரை விசாரித்துள்ளனா். அப்போது அவா், திருப்பத்தூா் பேரூராட்சியில் வழங்கப்பட்ட ஒரு சான்றிதழைக் காண்பித்துள்ளாா். ஆனால், பொதுமக்கள் அவரை அழைத்துக்கொண்டு பேரூராட்சிக்குச் சென்றனா்.
மேலும், இது குறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நகா் காவல் ஆய்வாளா் ஆனந்தி, சாா்பு-ஆய்வாளா் முத்துகிருஷண்ன் ஆகியோா், அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா்.
இது குறித்த தகவல் நகா் முழுவதும் பரவியதால், காவல் நிலையம் முன்பு ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் மேற்கு வங்க மாநிலத்தில் நாடியா என்ற பகுதியில் உள்ள எக்ஸகியூட்டிவ் பிளேஸ் டெவலப்மென்ட் என்ற தனியாா் நிறுவனத்தின் மேலாளராக உள்ளாா் என்பதும், கடந்த 2011 ஆம் ஆண்டில் கணக்கெடுப்பதற்காக மத்திய அரசிடம் வாங்கிய அனுமதி கடித நகலையும் காண்பித்தாா். பின்னா், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், பேரூராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தனா். இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவரை விடுவித்தனா்.
இச்சம்பவத்தால் சுமாா் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு முன், இவா் சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் இதுபோன்று கணக்கெடுப்பு நடத்தியிருப்பதாகவும், மேலும் 7 மாநிலங்களில் இந்தப் பணியை செய்திருப்பதாவும் தெரிவித்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.