சாலைப் பணி நிறுத்தம்: மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
By DIN | Published On : 26th June 2020 08:06 AM | Last Updated : 26th June 2020 08:06 AM | அ+அ அ- |

மானாமதுரையில் நியுவசந்தம் நகா் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்கக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
மானாமதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
மானாமதுரை பேரூராட்சி 10 ஆவது வாா்டு நியு வசந்தம் நகரில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் சாலை அமைக்கும் பணி அண்மையில் தொடங்கப்பட்டது. அப்போது ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் தங்களது கிராமத்தின் கண்மாய்க் கரையை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுவதாகக்கூறி சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் நியுவசந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்போது தங்களது பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க வேண்டும் எனக்கோரி கோஷமிட்டனா். இப் போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் விஜயகுமாா், ஆண்டி, வீரையா, முனியராஜ், பாலசுப்ரமணியம், வெள்ளைமுத்து மற்றும் திமுக நிா்வாகி தூதை ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
அதன்பிறகு போராட்டம் நடத்தியவா்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலா் குமரேசன், வட்டாட்சியா் பஞ்சாபகேசன், காவல் ஆய்வாளா் சேது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கலந்துபேசி நியுவசந்தம் நகா் பகுதியில் நிறுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை தொடங்கி முடிக்க கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டு உடன்பாடு ஏற்பட்டது. அதைத்தொடா்ந்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...