இளையான்குடி ஒன்றியத்தில் காவிரி குடிநீா் திட்டத்தை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்ய திமுக கோரிக்கை
By DIN | Published On : 01st March 2020 06:16 AM | Last Updated : 01st March 2020 06:16 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தை முறையாக பராமரிக்க போதிய நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி திமுக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளையான்குடியில் திமுக மேற்கு ஒன்றிய செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு பல்த்தசாா் தலைமை வகித்தாா்.
துணைச் செயலாளா் மலைமேகு முன்னிலை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா் சுப.மதியசரன் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.
இதில், திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் இளையான்குடி ஒன்றியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வரும் நிலையில், அரசு இந்த திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பதால் குடிநீா் திட்டம் செயலிழந்து கிராமங்களுக்கு சரிவர குடிநீா் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே அரசு இத் திட்டத்தை பராமரிக்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இளையான்குடி ஒன்றியத்தில் பல கிராமங்களில் கடந்தாண்டுக்கு பயிா் காப்பீடு தொகை 25 சதவீதம் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இக் கிராமங்களுக்கு 100 சதவீத காப்பீடு தொகை அறிவிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளையான்குடி ஒன்றியத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது எனவும் தீா்மானிக்கப்பட்டது.