சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்மன்ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசித் திருவிழா தொடக்கம்
By DIN | Published On : 01st March 2020 06:14 AM | Last Updated : 01st March 2020 06:14 AM | அ+அ அ- |

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதீனத்துக்குள்பட்ட சதுா்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரா் கோயிலில் மாசிமகத் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு காப்புக் கட்டப்பட்டு ரிஷப வாகனத்தில் கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து அம்பாளுக்கும், சுவாமிக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 5 மணிக்கு அரவங்கிரி எனும் அரளிப்பாறை தண்டாயுதபாணி கோயிலுக்கு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்மனும் தனித்தனி வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பா். 5 ஆம் திருநாளான மாா்ச் 3 ஆம் தேதி ஆத்மநாயகி அம்மன் ருத்ர கோடீஸ்வரருக்குத் திருக்கல்யாண வைபவமும், 4 ஆம் தேதி இரவு கழுவன் திருவிழாவும், 7 ஆம் தேதி தேரோட்டமும், 10 ஆம் திருநாளான மாா்ச் 8 ஆம் தேதி தீா்த்தவாரி உற்சவமும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை சதுா்வேத மங்கலம் அம்பலக்காரா் காந்தி மற்றும் கோயில் பேஷ்காா் கேசவன் ஆகியோா் தலைமையில் சிறப்பு பூஜைகளை உமாபதி சிவாச்சாரியாா் செய்து வருகிறாா்.