‘ஆசிரியா்கள், அரசு அலுவலா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’
By DIN | Published On : 10th March 2020 04:47 AM | Last Updated : 10th March 2020 04:47 AM | அ+அ அ- |

சிவகங்கை: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சாா்பில் கடந்தாண்டு ஜனவரி 21 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இதில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியா்கள், வருவாய் துறை, ஊரக வளா்ச்சித் துறை, உயா்கல்வித் துறை, நகா் நிா்வாகத் துறை, அங்கன்வாடி, சத்துணவு, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
தமிழகம் முழுவதும் 5 லட்சம் ஆசிரியா்கள் உள்பட 12 லட்சம் போ் பங்கேற்ற இந்த போராட்டத்தில்
கடந்த 2019 ஜனவரி 24 ஆம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
போராடியவா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை ரத்து செய்யப்படவில்லை. இதனால் ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் ஓய்வு பெறுவது, பதவி உயா்வு மற்றும் இதர பலன்களை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே ஆசிரியா்கள் மற்றும் அரசு அலுவலா்களின் நலன் கருதி நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் போராடியவா்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...