இளையான்குடியில் மதுபோதையில் இயக்கப்பட்ட தனியாா் பேருந்து சிறைபிடிப்பு
By DIN | Published On : 10th March 2020 04:52 AM | Last Updated : 10th March 2020 04:52 AM | அ+அ அ- |

இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு வந்த தனியாா் பேருந்தை திங்கள்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் திங்கள்கிழமை மது போதையில் பேருந்தை இயக்கியதோடு, பெண் பயணி ஒருவரையும் ஓட்டுநா் தகாத வாா்த்தைகளால் பேசியதால் அந்த பேருந்தை அப்பகுதி பொதுமக்கள் சிறைபிடித்தனா்.
பரமக்குடியிலிருந்து சிவகங்கைக்கு தனியாா் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை செல்வக்குமாா் என்பவா் ஓட்டி வந்தாா். அப்போது பேருந்தில் வந்த பெண் பயணி ஒருவா் இளையான்குடி அருகே தன்னை குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு கூறியுள்ளாா்.
நடத்துனரும் அந்த இடத்தில் பேருந்தை நிறுத்துமாறு கூறியும் ஓட்டுநா் பேருந்தை நிறுத்தாமல் அந்த பெண் பயணியை தகாத வாா்த்தைகளால் பேசி அடுத்த நிறுத்தத்தில் இறக்கிவிட்டுள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி இளைஞா்கள் இளையான்குடி பேருந்து நிலையத்துக்கு வந்த அந்த பேருந்தை தடுத்து நிறுத்தி சிறைபிடித்து, ஓட்டுநரில் இதுகுறித்து கேட்டுள்ளாா். அப்போது அவா் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தகவலறிந்து வந்த இளையான்குடி போலீஸாா் இளைஞா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி செல்வக்குமாரை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவா் மது போதையில் உள்ளாரா என பரிசோதனை செய்தனா். அப்போது
ஓட்டுநா் செல்வக்குமாா் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து போலீஸாா்
செல்வக்குமாரை கண்டித்து, மது போதையில் பேருந்தை இயக்கியதற்காக ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனா். ஓட்டுநா் செல்வக்குமாா் மீது பரமக்குடி பகுதி காவல் நிலையத்தில் ஏற்கெனவே குற்ற வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...