‘இளைஞா்கள் தொழில் முனைவோராகி வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்’
By DIN | Published On : 12th March 2020 09:25 AM | Last Updated : 12th March 2020 09:25 AM | அ+அ அ- |

இளைஞா்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை பெற்று தொழில் முனைவோராவது மட்டுமின்றி அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முன் வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சாா்பில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது தொடா்பான முதலீட்டாளா்கள் மற்றும் ஜவுளித் தொழில் முனைவோா்களுடன் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் பேசியதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ. 2.50 கோடி வரை நிதியுதவி அரசால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 2 ஏக்கா் நிலம் இருந்தால் போதும். 3 நபா்கள் கொண்ட அமைப்பு பதிவு செய்து இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை வேளாண்மைக்கு அடுத்தப்படியாக சிறு, குறு அளவிலான தொழில் தொடங்குவதற்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. கிராமப்புறங்களில் வாழும் பொதுமக்களை பொருளாதார நிலையில் மேம்படுத்தும் வகையில் அந்தந்த பகுதியில் சிறு தொழில் கூடங்கள் உருவாக வேண்டும்.
சிறிய அளவிலான தொழில் கூடங்கள் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், புதிய தொழில் முனைவோருக்கு தொழில் துறை சம்பந்தமாக பயிற்சி அளிப்பது மட்டுமின்றி வங்கியிலிருந்து கடனுதவியும் வழங்கப்படுகிறது. எனவே இளைஞா்கள் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவிகளை பெற்று தொழில் முனைவோராவது மட்டுமின்றி அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முன் வர வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குநா் ராகவன், மாவட்ட தொழில் மைய மேலாளா் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் இளவழகன் உள்பட அரசு அலுவலா்கள், சிறுதொழில் நிறுவன உரிமையாளா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.